அரசியல் செயற்பாடுகளை தீர்மானிக்கவுள்ள ஜனநாயக ஆதவனின் மூன்றாவது உதயம்

விசு கருணாநிதி

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் எட்டாந்திகதி இலங்கை மக்களின் வாழ்க்ைகயில் மறக்க முடியாத நாள்!
அந்தகார யுகமொன்றிலிருந்து ஜனநாயக ஒளிப்பரப்பு பிரகாசிக்கத் தொடங்கிய யுகமொன்றின் ஆரம்ப நாள் என்பது முதலாவது முக்கியத்துவம். அடுத்தது ஓர் யுக புருஷரின் ஜனன தின நினைவு நாள். இந்த இரண்டு முக்கியத்துவமும் நிறைந்த நாளொன்றை இலங்கையர்கள் அனைவரும் கட்சி பேதமின்றிக் கடைப்பிடிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
நல்லாட்சியாகத் தொடர்ந்த புதிய அரசு இன்று நல்லிணக்கத்தின் ஊடாக மூன்றாவது ஆண்டில் கால் பதிக்கின்றது. அதேநேரம், தேசத்தின் மைந்தர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 118ஆவது ஜனன தினம் கொண்டாடப்படுகிறது. எனவேதான் இந்தத் தினத்தை நாட்டு மக்களின் நினைவுப் பதிவேட்டிலிருந்து அழிக்க முடியாததாகியிருக்கிறது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து அப்படி என்னதான் செய்துவிட்டது, இரண்டாண்டைக் கொண்டாடுவதற்கு? என்று கேள்வி கேட்கும் சாமானியனுக்குப் பல்வேறு விடைகள் இருக்கின்றன. அவை கேள்விகளாகவும் முன்வைக்கப்படுகின்றன.
எங்காவது கண்ணுக்குத் தெரியும்படியாக ஏதாவது அபிவிருத்தி நடக்கின்றதா, நடந்திருக்கின்றதா? ஊழல்கார்களையும் உதவாக்கரைகளையும் பிடித்து வழக்குப் போடுகிறார்கள், பின் விடுதலை செய்கிறார்கள்.

எவருக்காவது தண்டனை வழங்கினார்களா? இதனையா மக்கள் கேட்டார்கள்? அரசாங்கத்து அமைச்சர்களே ஒருவருக்ெகாருவர் முரண்பட்டுக்ெகாள்கிறார்களே! இப்படி சென்றால் இழுத்துக்ெகாண்டு செல்ல முடியுமா? பெற்றோல், டீசல், காஸ் விலையைக் குறைத்துவிட்டால் போதுமா? அரிசி வேண்டாமா? மாணவர்கள் முதற்கொண்டு, தொழிலாளர்கள், சாரதிகள், விற்பனையாளர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் இறங்குகிறார்களே! நல்லாட்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் இவை எல்லாம் குந்தகம் இல்லையா? இவற்றை நிவர்த்திப்பதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? என்பது சாமானிய மக்களின் சாதாரணமான கேள்விகள், எதிர்பார்ப்புகள்.
இந்தக் கேள்விகளுக்குப் பல் வேறு கோணத்தில் பதில் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் பதில்கள் உண்டு. அந்தப் பதில்கள் மக்கள் மனத்திலும் இருக்கிறது. சில கேள்விகளுக்கான பதில்களைக் கேள்வியாகவும் மீள முன்வைக்க முடியும்.
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில், எப்போதாவது இரண்டு பெரியதும் பெரும்பான்மையானதுமான கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்திருக்கின்றனவா? என்பதை முதற்கேள்வியாக வைக்க முடியும். அவ்வாறான கூட்டாட்சிக்குச் சிறுபான்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் ஆதரவு நல்கியிருக்கின்றனவா? தமிழர் தரப்பு இந்தக் காலகட்டத்தைப்போன்று எந்தக் காலத்திலாவது அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டு இருக்கின்றதா? ஏன், டட்லி சேனநாயக்கவுடன் இணைந்து பணியாற்றவில்லையா? என்று எவராவது கேட்டால், அந்தக் காலகட்டத்தை நினைத்துப்பார்த்துத்தான் நிம்மதியடைய முடியும்!
எல்லாவற்றையும்விட கடந்து சென்ற முப்பதாண்டுகளில், தற்போதைய அரசியல் சூழல், ஜனநாயக அமைதி, துணிச்சல் மிகுந்த கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்கின்றதா? இவற்றுக்ெகல்லாம் இல்லை என்பதுதான் பதில் என்றால், அவைதான் கண்ணுக்குத் தெரியாத அபிவிருத்தி என்ற முடிவுக்கு வரலாமா? அதற்கு முன், மேலும் சில விடயங்களையும் ஒப்பீட்டு ரீதியாக நோக்கிவிட்டுப் பின் நிதானமாகச் சிந்தித்தால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
உண்மையில், 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாந்திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல், சிவில் சமூகப் புரட்சியே என்றால் மிகையாகாது. அரசியல் நெருக்குவாரப் பிடிக்குள் இருந்து நாட்டையும் மக்களையும் ஜனநாயகப் பரப்பிற்குள் மீளக் கொண்டு வருவதற்கான பெரும் போராட்டமே அன்று நடந்து முடிந்தது. கரணம் தப்பினால் மரணம் என்பதைப்போன்ற ஆபத்தான ஒரு தீரச்செயலில் இறங்குவதற்கு ஆளுந்தரப்பிற்குள் ஓர் அமைச்சர் முன்வந்தமை அன்றைய தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக எதிரணியினரும், சிறுபான்மையினரும், சிறிய கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும் ஒரே கூட்டணியாகக் கைகோத்துக்ெகாண்டனர்.

அவர்களின் ஒரே நோக்கம், இலக்கு நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதுதான்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவதாக, ஜனவரி ஒன்பதாந்திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்கு உறுதியளித்தனர். தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் தினத்தில் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவேன் என்று மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் தெரிவித்து வந்ததைப்போலவே செயற்பட்டார். அன்றைய தினமே இரு தலைவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்ைக ஏற்பட்டது. அன்று பிரகடனப்படுத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்தின் முதற்பணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது. அடுத்தது சீரழிந்துபோயிருக்கும் நிர்வாகக் கட்டமைப்பைச் சீர்படுத்துவது.

ஊழல்காரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது. கருத்துச் சுதந்திரத்திற்கு வழிவிடுவது. அடக்கு முறைக்கு முடிவு கட்டுவது. இவை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத அவசரமான அவசியத் தேவைகளாக இருந்தன.
அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எவ்வளவு காலத்திற்கும் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற சட்ட ஏற்பாடு செயலிழக்கச்செய்யப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இதில், அரச ​ேசவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு என ஒன்பது ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு நிர்வாக இயந்திரம் சீராக இயங்குவதற்கான உராய்வு நீக்கம் செய்யப்பட்டது.
சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பாக இடம்பெற்ற பதவி நியமனங்கள், நீக்கங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டன. இதில், முதலாவதாக பிரதம நீதியரசர் திருமதி சிராணி பண்டாரநாயக்க மீள நியமிக்கப்பட்டு முறையாக விலகச்செய்தமை, இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய கௌரவத்தை மீள உறுதிபடுத்தியமை, 1980 போராட்டக்களத்தில் இருந்தமைக்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினவை முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள பணியில் அமர்த்தி வேலை இழந்த முழுக்காலத்திற்கும் நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுக்ெகாடுத்தமை, அரசாங்கத்தின் ஜனநாயகப் போக்கினை எடுத்தியம்புவதற்கான சில விடயங்களாகக் கருத முடியும்.
கண்ணுக்குத் தெரியாத அபிவிருத்திகள் என இன்னும் பல்வேறு செயற்பாடுகளைக் குறிப்பிட முடியும். வடக்கு கிழக்கிலும் கொழும்பிலும் மலையகத்திலும் நாட்டின் இன்னபிற பகுதிகளிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழல் தோற்றுவிக்கப்பட்டமையோடு ஒட்டுமொத்த மக்களும் பயப்பீதியின்றிப் பயணிக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் அச்சமில்லாத சூழ்நிலை ஏற்படுத்திக்ெகாடுக்கப்பட்டமையும் பெரும் வரப்பிரசாதமாகவே மக்களால் கருதப்படுகிறது. தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இப்போதுதான் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதாகக் கருதுகிறார்கள்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் எதுவும் நடக்காவிட்டாலும்கூட, எதுவும் நடந்துவிடுமோ என்ற அச்சம் எப்போதுமே மக்களைப் பெரிதும் துன்புறுத்திக்ெகாண்டே இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு மனநிலையிலிருந்து விடுதலையாகி வந்திருப்பதாக மக்கள் உணர்ந்துகொண்டுள்ளபோதிலும், இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் எத்துணையோ உண்டு என்பதை மறுக்கவே முடியாது.
இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதும் தகவலை அறிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் நல்லிணக்க அரசாங்கத்தின் மற்றொரு சாதகப்போக்கு. விசேடமாக அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் கடந்த காலங்களில் அடக்கு முறையைச் சந்தித்து வந்ததை மறுக்க முடியாது. அரசாங்கத்திற்குப் புகழ்பாடும் விதமாகவே செய்திகளையும் தகவல்களையும் அப்போதைய அரசாங்கம் எதிர்பார்த்தது. இன்று அந்த நிலைமை மாற்றமடைந்திருப்பதோடு, அரசாங்கத்தின் மீதான குறைபாடுகளை மக்கள் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சுதந்திர நிலையைப் பயன்படுத்தி சில ஊடகங்கள் திரிபுபடுத்திய செய்திகளை வௌியிடவும் செய்தன. அப்போது இதை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிரதமர், அவ்வாறான ஊடகங்களை நாம் தண்டிக்கவில்லை, வௌிப்படையாகவே விமர்சிக்கின்றோம்,அறிவுறுத்துகின்றோம் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தார். சிலவேளைகளில் குறித்த ஊடகத்தைச் சாடுவதற்கும் பிரதமர் தவறவில்லை. இவையெல்லாம் ஜனநாயகத்தின் வெளிப்பாடுகள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமிழர் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக்கியமை ( தெரிவாகியமை) பிரதம நீதியரசர் பதவிக்குத் தமிழர் நியமிக்கப்பட்டமை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலும் தமிழர் ஒருவரை நியமித்து அலங்கரித்தமை போன்ற செயற்பாடுகள் அவர்களுக்குக் கௌரவத்தைக் கொடுத்திருக்கிறது என்று நினைக்கக்கூடும்.ஆனால், எதிர்க்கட்சித் தலைவரைத் தவிர, ஏனையோரின் பெயர்கள் தமிழாக இருந்தாலும், அவர்கள் தொழில்வாண்மையுள்ள நிபுணர்கள் என்பதுதான் உண்மை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத சில ஊடகங்கள்கூட அதனை இனவாதக் கண்ணோட்டத்தில் பிரசாரம் செய்தன. அதற்கும் ஒருபடி மேல்சென்று, நாட்டுத் தலைவர்கள் இருவரும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இலங்கையை ஒரு தமிழர் தலைமையயேற்றிருக்கின்றார் என்று பிரதம நீதியரசர் கே.சிறிபவனைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றன. இவ்வாறான சிக்கல்களிலிருந்தெல்லாம் விடுவித்துக்ெகாண்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்து இன்று மூன்றாவது ஆண்டில் தடம் பதிக்கின்றது நல்லிணக்க அரசாங்கம்.
அந்த வகையில் இந்த அரசாங்கத்தின் முழு ஆட்சிக் காலத்திலும்கூட நிறைவேற்றி முடிக்க முடியாத அதுவும் கண்ணுக்குத் தெரியாத பல அபிவிருத்திகள் எஞ்சியிருக்கின்றன. அவற்றுள் மிக மிக முக்கியமான விடயமாக இருப்பது புதிய அரசியலமைப்பு.

ஏனையவை தேர்தல் முறை மாற்றம், பொருளாதார அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டத்தைக் கொண்டு வருவது, போர்க்குற்ற விசாரணையை சர்வதேசத்திற்கு உறுதியளித்தபடி முன்னெடுப்பது...
இன்னுமோர் முக்கியமான விடயமாகவும் அரச ஊழியர்களின் மனக்குறையாகவும் இருப்பது சம்பள அதிகரிப்புத் தொகையை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்ப்பது. இஃது இன்னமும் ஓர் எதிர்ப்பார்ப்பாகவே இருந்து வருகின்றது. வடக்கில் காணிகளை விடுவித்து இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டிருந்தாலும், அஃது இன்னமும் நிறைவுசெய்யப்படவில்லை. வீடமைப்புத் திட்டத்தைப்பற்றிய தீர்மானகரமான முடிவை எடுக்க வேண்டிய நிலையும் இருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்ைக வாக்குறுதிகளோடு மட்டும் நின்றுவிடாமல் அதனைச் செயற்படுத்துவது, தோட்டத் தொழிலாளர் சம்பள விடயத்தில் கண்டுகொள்ளாத போக்கு என்வவையெல்லாம் மக்கள் மத்தியில் இன்னமும் ஏக்கங்களாகவே இருக்கின்றன. இவற்றைச் செயற்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கடப்பாடு என்பது கடினமான பயணமாகவே அமையும்.
மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திப் பணிகள், கொழும்பு பொருளாதார நகர அபிவிருத்தி, மின்சார ரயில் போக்குவரவு, நெடுஞ்சாலை விஸ்தரிப்புகள் எனப் பல கண்ணுக்குத் தெரியும் அபிவிருத்திகளும் கண்ணெதிரே காத்திருக்கின்றன.

இந்நிலையில், கண்ணுக்குத் தெரிபவற்றையும் புலப்படாதவற்றையும் பிரித்தறிந்து நோக்குவோமானல், நல்லிணக்க அரசாங்கம் இரண்டாண்டுகளில் எவற்றைச் சாதித்திருக்கிறது என்பது தெளிவாகும்.
நிறைவாக, அரசாங்கத்தில் தற்போது பங்காளியாக இருக்கின்ற சிறிய அரசியல் கட்சிகள் அனைத்தையும் இறுக அணைத்துக்ெகாண்டு புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கு மேற்குறிப்பிட்ட விடயங்களைச் செயற்படுத்த வேண்டியது இன்றியமையாதது. இதன் மூலமே மூன்றாவது ஆதவனின் உதயத்தின் பிரகாசம் தங்கியிருக்கும். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
5 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.