மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம்

மகேஷ் பிரசாத்

2015ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றம் வடக்கு, கிழக்கின் நிலைமைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கின. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்பட்ட கெடுபிடிகள் மிகவும் குறைந்து, சாதாரண வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். தன்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கடப்பாட்டை உணர்ந்தவர்களாக ஜனாதிபதியும், அரசாங்கமும் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இருந்தபோதும் வடக்கு, கிழக்கில் எதிர்பார்த்தளவு பெளதீக ரீதியான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லையென்ற விமர்சனங்களும் காணப்படுகின்றன. அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதற்கு அப்பால் அங்குள்ள மக்கள் வாழ்வதற்கான அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக வடபகுதியில் காணப்பட்ட இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்டு மக்கள் அச்சமின்றி நடமாடக்கூடிய அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டாலும் ஒப்பீட்டளவில் இராணுவத்தினரின் நடமாட்டங்கள் மற்றும் கெடுபிடிகள் குறைந்தே உள்ளன.
மூன்று தசாப்தத்துக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வடுக்களை குறைத்து அவர்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற விடயத்தில் கடந்த கால அரசாங்கத்தைவிட தற்போதைய அரசு ஒப்பீட்டளவில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும் மக்களின் மனங்களை ஆற்றுவதற்கான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை. மாற்றாக தமக்கு வருமானத்தை அதிகம் ஈட்டிக்கொடுக்கக் கூடிய வீதி அபிவிருத்தி உள்ளிட்ட வடக்கிற்கான பெளதீக அபிவிருத்திகள் குறித்தே அதிக அக்கறை காட்டியது. எனினும், 2015 ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னரான அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பெளதீக அபிவிருத்தியைவிட உளரீதியான அல்லது சாதாரண வாழ்க்கை முன்னெடுப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனமெடுத்து செயற்பட்டு வருகிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் வீட்டுத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 65000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டமொன்றை புதிய அரசு முன்மொழிந்திருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளபோதும் மக்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்துக்கு காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும். உத்தேச வீட்டுத் திட்டமானது மக்களுக்கு நீண்டகாலம் பயன்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும். மாறாக குறுகிய காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொருத்து வீடுகளாக இருக்கக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினர் காண்பித்துவரும் எதிர்ப்பையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. வடபகுதி மக்களின் வாக்குகளை பெற்ற அரசாங்கம் அவர்களின் மனங்களையும் வெல்லக்கூடிய வகையில் முடிவொன்றை எடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. ஏற்கனவே இது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதால் உயர்மட்டத்தில் நல்லதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும். இதனைவிட கடந்த காலங்களைவிட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கின் அபிவிருத்திகளுக்காக பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தாம் ஆட்சிக்கு வர உதவிய வடபகுதி மக்களை அரசாங்கம் முழுமையாக ஒதுக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இருந்தாலும், புதிய அரசாங்கம் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மாகாண சபைகளுடன் கலந்துரையாடுவதில்லையென்ற குற்றச்சாட்டு குறிப்பாக வடமாகாண சபையினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான அபிவிருத்தி நிதிகள், எதுவித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் சென்றுள்ளன. இது பல தடவைகள் அரசாங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டபோதும், வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தம்மையும் உள்வாங்க வேண்டும் அல்லது தம்முடன் கலந்துரையாடி அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என வடமாகாண சபை தொடர்ச்சியாக கூறி வருகிறது. இது விடயத்தில் மத்திய அரசாங்கமும், மாகாண சபையும் கயிறுஇழுத்தலில் ஈடுபடாது சமரசமான முறையில் மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இதில் வடமாகாண சபையும் மத்திய அரசாங்கத்துடன் முண்டாது தனது வினைத்திறனை கூட்டிக்கொள்வது பற்றி கவனமெடுப்பதும் அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது இவ்விதமிருக்க வடக்கு, கிழக்கில் மக்கள் நடமாட்டத்துக்குக் காணப்படும் சுதந்திரம் பற்றி சற்று நோக்கினால், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழுக தமிழ் பேரணி மற்றும் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அல்லது அவற்றை செயற்படுத்துவதற்கு எந்தவித முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்படாமை என்பன கவனிக்கப்படவேண்டிய விடயங்களாகும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இல்லாத முற்றிலும் மாறுபட்ட நிலைமையொன்று இந்த அரசாங்கத்தின் காலத்தில் காணப்படுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க மக்களுக்குக் காணப்படும் ஜனநாயக உரிமை ஓரளவு மதிக்கப்படுகின்றது என்றே கூறவேண்டும்.
முற்றுமுழுதாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுமே யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் பேரணியை நடத்தியிருந்தது. இந்தப் பேரணி தென்பகுதியிலுள்ள இனவாத சக்திகளால் தூக்கிப்பிடிக்கப்பட்டாலும், விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கம் பேரணியைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தின் காலமாகவிருந்தால் அரசுக்கு எதிராக செயற்பட்டவர்கள் காணாமல்போயிருப்பார்கள். ஆனால் இந்த அரசின் ஆட்சியில் அவ்வாறான அச்சங்கள் எதுவும் இன்றி பேரணி நடத்தப்பட்டது. மக்களுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கான உரிமைகள் உள்ளது. அதனை தாம் ஒருபோதும் தடுக்கப் போவதில்லையெனக் கூறி அரசாங்கம் மெளனமாக இருந்துவிட்டமையையும் நாம் இங்கு உன்னிப்பாக பார்க்கவேண்டும்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தின் மற்றுமொரு செயற்பாடாக, மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு வழங்கியிருந்த அனுமதியைக் கூறமுடியும். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் பகிரங்கமாக மக்கள் மாவீரர் நாளை அல்லது யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை அனுஷ்டிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் மாவீரர் நாளை ஓரளவு சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான சந்தர்ப்பம் கடந்த வருடம் மக்களுக்குக் கிடைத்திருந்தது. வழமையாக நவம்பர் மாதமாயின் இராணுவக் கெடுபிடிகள், இராணுவப் புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் என்பன அதிகரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற அச்ச உணர்வொன்றே ஏற்படுத்தப்பட்டு வந்தது. உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு அஞ்சி வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருந்த நிலைமை மாறி, மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த பகுதிகளைத் தேடிச்சென்று விளக்கேற்றி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பம் இம்முறை கிடைத்திருந்தது. இராணுவத்தினதோ அல்லது புலனாய்வுப் பிரிவினரதோ அழுத்தங்கள் எதுவும் மக்கள் மீது பிரயோகிக்கப்படவில்லை.
யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர்வதற்கான உரிமை இருப்பதாகக் கூறிய அரசாங்கம் தடைகள் எதனையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. தென்பகுதியில் தனக்குக் காணப்படும் அரசியல் அழுத்தங்களையும் மீறி இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகள் வடபகுதி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதுபோன்ற செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் சிறியதொரு நிம்மதியைக் கொடுத்தாலும் நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கும் நிரந்தர அரசியல் தீர்வொன்றே அவர்களுக்கு முழுமையான நிம்மதியையும் திருப்தியையும் வழங்கும். ஏற்கனவே கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லையென்ற குறைபாடு மக்கள் மத்தியில் காணப்படுகிறது. சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகவிருந்தாலும், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளகப் பொறிமுறையொன்றுக்கான இணக்கம் ஏற்பட்டிருந்தது. இது மக்களுக்கு அதிருப்திதரும் விடயமாக இருந்தாலும் உள்ளகப் பொறிமுறையைக் கூட இன்னமும் அரசாங்கம் அமைக்காது காலத்தை இழுத்தடிப்பது சற்று மக்களை முகஞ்சுளிக்க வைத்துள்ளது.
இதுபோன்றதொரு அரசியல் பின்னணியிலேயே அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை அரசு ஆரம்பித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ளும் குழுவானது வடக்கு, கிழக்கிற்கும் சென்று கருத்துக்களைப் பெற்றிருந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், அரசியல் தீர்வானது எவ்வாறானதாக இருக்கவேண்டும் என்பதற்கு பல யோசனைகளையும் முன்மொழிந்திருந்தனர். இந்த முன்மொழிவுகளையும் கவனத்தில் கொண்டு அரசியலமைப்புத் தயாரிக்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. அரசாங்கம் தயாரிக்கவிருக்கும் அரசியலமைப்பானது நீண்டகாலம் புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குவதாக அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
வடக்கிலும் சரி தெற்கிலும் சரி ஒருசில அடிப்படைவாதிகள் தமது சுயநல அரசியல் நோக்கத்துக்காக புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியை வலியுறுத்தியதாக அல்லது சமஷ்டியை கொண்டதாக இருக்க வேண்டும் என மாறிமாறி கூறிவருகின்றனர். இவ்வாறான கருத்துக்களை மக்களை வீணாக குழப்பும் செயற்பாடுகளேயன்றி வேறேதும் இல்லை. எனவே, அரசாங்கம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தக்கூடிய வகையிலான அரசியலமைப்பொன்றை தயாரிக்க வேண்டும். இது வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக அமையும்.
அரசியல் ரீதியான தீர்வு ஒருபுறம் இருக்க வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டிய பாரியதொரு தேவை காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது, பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் நிலைமைய மேம்படுத்துவது போன்ற அடிப்படை விடயங்கள் இன்னமும் பாராமுகம் உள்ளது. அரசாங்கம் தன்னாலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் மேலும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. 10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 16 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.