ஹம்பாந்தோட்டையில் உக்கிர ஆர்ப்பாட்டம்

படங்கள்: ருக்மல் கமகே

ஹம்பாந்தோட்டையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம் தினகரன் விசேட நிருபர்

ஹம்பாந்தோட்டை ருஹு

ணுபுர பொருளாதார அபி விருத்தி வலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கலந்துகொள்ள இருந்த மண்டபத்திற்கு முன்பாக வீதியில் பெருந்திரளானோர் பெரும் எதிர்ப்பு கோஷங்களுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் முற்பட்டபோது ஆர்ப்பாட்டம் உக்கிரமடையவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் தடுக்க முற்பட்டோரின் செயற்பாடுகளினால் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரிய ஆர்ப்பாட்டம் தடைகளுக்கு மத்தியில் நேற்று இலங்கை – சீனா இணைந்த அம்பாந்தோட்டை பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
நிகழ்வு இடம்பெற்ற மிரிஜ்ஜவெல கைத்தொழில் அபிவிருத்தி வலய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெருமளவு பெளத்த பிக்குமார் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 9.30 மணியளவில் மேற்படி நிகழ்வு இடம்பெறவிருந்த போதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து 11.00 மணியளவிலேயே பிரதமரின் விஜயத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வு ஆரம்பமான பின்பும் பிரதான மேடைக்கு முன்பாகவுள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரியளவில் இருந்து கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை உயர்த்தியும் எதிர்ப்புடன் மேற்கொண்டனர். மஹிந்த அணியினர் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில, டளஸ் அளகபெரும முதலானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே ரயர்களும் எரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை முதல் அம்பலாந்தோட்டை வரை பதற்றமான நிலை காணப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசத்தொடங்க பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அச்சமயம் நிலவிய சூழ்நிலையால் நிகழ்வில் பங்கேற்ற மக்களும் விழா மண்டபத்திற்கு வெளியே வந்து பதில் கூக்குரலிட ஆரம்பித்தனர். சில நிமிடங்களுக்கு இது நீடித்தது. நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் விழா மேடைக்கு அருகில் வீதியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நேரிட்டது. இத்தகைய சூழ் நிலையிலும் நிகழ்வு எவ்வித தடையுமின்றி இடம்பெற்றது. பெருமளவு மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதமரும் சீனத் தூதுவரும் பெயர்ப்பலகையைத் நிரைநீக்கம் செய்து செயற்றிட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து கைகுலுக்கிக் கொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைச்சரும் இத்திட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கினர்.
அமைச்சர்கள் சாகல ரட்நாயக்க, ரவி கருணா நாயக்க, சஜித் பிரேமதாச, விஜித் விஜய முனி சொய்சா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சில அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததை காணமுடிந்தது. (ஸ)
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
15 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.