ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வலய பணிகள் ஆரம்பம் தடைகளையும் தாண்டி பிரதமர் அங்குரார்ப்பணம்

ஹம்பாந்தோட்டையில் றுஹுணு பொருளாதார அபிவிருத்தி வலய நிர்மாண பணிகளை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் சீன தூதுவர், அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர். சீனத் தூதுவருக்கு பிரதமர் ​ைகலாகு கொடுப்பதை படத்தில் காண்கிறீர்கள். (படம்: ருக்மல் கமகே)

ஹம்பாந்தோட்டையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், ஹம்பாந்தோட்டை தினகரன் நிருபர்

சீனா, இலங்கையில் ஐந்து பில்லியன் டொலரை முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பொருளாதார அபிவிருத்தி வலயங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு அதன் பிரதிபலன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என பிரதமர் தெரிவித்தார். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளை எவரும் தடுக்க இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட பிரதமர் பெருமைக்குரிய எதிர்காலத்தை இளைஞர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் றுஹுணு பொருளாதார அபிவிருத்தி வலய நிர்மாண பணிகளை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை – சீன அரசாங்கங்கள் இணைந்த கூட்டுச் செயற்திட்டமான றுஹுணு பொருளாதார அபிவிருத்தி வலயத்திற்கான கருத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்று  இதற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக நட்டு வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இலங்கைக்கான சீனத் தூதுவர் ஈ. ஹியெங்லி யெங், அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் ராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
சாதாரண மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படுகிறது. இது முழு இலங்கைக்கும் விஸ்தரிக்கப்படும்.
ஜே.ஆர். காலத்தில் நாம் மகாவலி போன்ற பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தது. தற்போது மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் ஹம்பாந்தோட்டையிலிருந்து அபிவிருத்தி ஆரம்பிக்கப்படுகிறது.
சீனாவின் நிதியிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்தார். எனினும் சீன முதலீட்டாளர்களை இணைந்துக் கொள்ள அவரால் முடியாமல் போனது.
பல்வேறு பிரச்சினைகள் சவால்களுக்கு மத்தியிலேயே நாம் அரசாங்கத்தைப் பாரமெடுத்தோம். இந்நிலையில் மேற்படித் துறைமுகத்தில் 2014 இல் 983 மில்லியன் ரூபாவும் 2015 இல் 449 மில்லியன் ரூபாவும் என தொடர்ந்து கடனையும் மீளச் செலுத்தி நட்டத்தையும் எதிர்கொள்ள எமக்கு நேர்ந்தது. இரண்டையும் எம்மால் செய்ய முடியாதுள்ளது.
கடன் வழங்கிய சீன எக்ஸிம் வங்கியோடு நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே கைத்தொழில் பேட்டை அமைத்தல், பொருளாதார அபிவிருத்தி வலயம் அமைத்தல் போன்ற முடிவுக்கு வரமுடிந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வது உட்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
15,000 ஏக்கரில் பொருளாதார அபிவிருத்தி வலயம் அமையவுள்ளது. ஹம்பாந்தோட்டை மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கி இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
‘சைனா ஹபர்’, சைனா மேர்ச்சன்ட் நிறுவனங்களே தற்போது இதில் முதலீடு செய்யவுள்ளன. சீனா உட்பட மேலும் பல நாடுகளின் முதலீட்டாளர்களை இணைத்துக் கொள்வதே எமது நோக்கமாகும் எனினும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
5 + 4 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.