அதிவேக நெடுஞ்சாலையில் அம்பியுலன்ஸிலிருந்து வீழ்ந்த தாய்

வசந்தா அருள்ரட்ணம்

பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை. தனது கருவில் உருவான சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும், மனதளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, குழந்தையை பிரசவிக்கும் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். சொல்லப்போனால் தாய்மையின் போது ஒரு பெண் மறுபிறவி எடுக்கின்றாள்​ என்றே கூறவேண்டும்.
எனவே இக்காலப்பகுதியில் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திலும், அதனை பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை தாய்- சேய் நலன்கருதி விசேட விடுமுறைகள், சிகிச்சைகள், கருத்தரங்குகள், சத்துணவு வேலைத்திட்டங்கள், மாதாந்த பரிசோதனைகள் என முறையான பாராமரிப்பு வேலைத்திட்டங்கள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக தென்னாசியப் பிராந்தியத்தில் தாய் சேய் ஆரோக்கிய சேவை மிகச் சிறப்பாக காணப்படும் நாடுகளில் இலங்கை பிரதான இடத்தைப் பெற்றுள்ளதுடன், தாய் சேய் மரண வீதமும் மிகவும் குறைந்த மட்டத்திலே உள்ளது.
எனினும் இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் பலரின் அலட்சியத்தினாலும், கவனயீனத்தினாலும் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயிர் இழப்புகளும், உடல்ரீதியான பாதிப்புகளும் அதிகமாக இலங்கையில் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.
அதிக வேகத்துடன் சென்ற பஸ்ஸிலிலிருந்து கீழே வீழ்ந்த கர்ப்பிணிப்பெண் மரணம், அம்புலன்ஸில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது வைத்தியர்களின் அலட்சியத்தினால் கர்ப்பிணி பெண் மரணம்' என பல செய்திகளை அன்றாடம் பார்க்கின்றோம். அந்தவகையில் தங்காலை வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த தாயொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது விபத்துக்குள்ளாகியிருந்தார். அம்புலன்ஸின் கதவு சரியான முறையில் பூட்டப்பட்டிருக்காமையினால் அதிவேக நெடுஞ்சாலையில் கீழே வீழ்ந்த அவர் எந்தவித பாதிப்புகளுமின்றி தெய்வாதீனமாக உயிர்பிழைத்தார். தங்காலை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக கடந்த ஒரு வார காலத்திற்கு முன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசவத்தின் போது அழகிய குழந்தையொன்றை பெற்றெடுத்த அவருக்கு உடலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வைத்தியசாலையிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தாயும் சேயும் சுமார் ஒரு வாரகாலமாக வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதன்போது குறித்த பெண்ணுக்கு தங்காலை வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமையினால் அவர் கடந்த 4 ஆம் திகதி காலை 9.20 மணியளவில் தங்காலையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இதன்போது அம்புலன்ஸின் கதவு சரியான முறையில் பூட்டப்படாது இருப்பதை வைத்தியசாலை ஊழியர்கள் கவனிக்காது இருந்திருக்கின்றார்கள். இதன்விளைவாக அதிகவேக நெடுஞ்சாலையில் கொடகம பகுதியின் ஊடாக அம்புலன்ஸ் வண்டி பயணித்துக்கொண்டிருக்கையில் கதவு தானாகத் திறந்து குறித்த பெண் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். எனினும், அதிஷ்டவசமாக அவருக்கு பெரும் காயங்கள் எதுவும் ஏற்படாமையால் தற்சமயம் அவர் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் எற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கமெராவில் பதிவாகியுள்ளது. எனவே இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. கடந்த வருடம் நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி தாயொருவர் தனியார் பஸ்லிலிருந்து தவறி கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார். இவர் ஒரு கர்ப்பிணிப் பெண் என்று தெரிந்தும் பஸ்லில் பயணித்த யாரும் அவருக்கு ஆசனமொன்றை வழங்கவில்லை. எனவே பஸ்லில் நின்றுக்ெகாண்டே சென்ற அவர் பஸ் வண்டியிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், வைத்தியர்களால் அவருடைய குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. பிரசவத்தின் பின்னர் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். எனவே கடமை, சட்டம் என்பவற்றுக்கு அப்பால் மனிதநேயத்துடன் இத்தகைய பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உருவாக வேண்டும். அதுமட்டுமின்றி பொறுப்பற்ற வித்த்தில் நடக்கும் ஊழியர்கள் மீதும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
9 + 9 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.