மக்கள் பணிக்காக அர்ப்பணிக்கும் 'சேவைச்சிகரம்' டி. அய்யாத்துரை!

விசு கருணாநிதி

தவசிதேவர் அய்யாத்துரை இலங்கை தொழிற்சங்க, அரசியலில் மறக்க முடியாத பெயர். மலையகத்தில் கடந்த 52ஆண்டுகளாகத் தொழிற்சங்கம், அரசியல் எனத் தன்னை அர்ப்பணித்து வருகின்றமையே அதற்குக் காரணம்.

அரசியலிலும் சரி, தொழிற்சங்க அமைப்பிலும் சரி நீண்டகாலம் ஒரே கொள்கைப்பிடிப்புடன் , ஒரே அமைப்பில் செயற்பட்டு வருபவர்கள் மிகச் சொற்பமானவர்களே. ஒரு சில வருடங்களாவது வேறு அமைப்பிற்குச் சென்று மீண்டும் ஆரம்ப அமைப்பில் இணைந்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அய்யாத்துரை 1960களில் தமது வளர் இளம் பருவ வயதிலேயே திராவிட முன்னேற்றக் கழக செயற்பாட்டாளர்களுடன் தன்னை இணைத்துக்ெகாண்டவர். பின்னாளில் 1966இல் வி.கே.வெள்ளையனின் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துகொண்டு அண்மைய காலம் வரை அந்தச் சங்கத்தினை வழிநடத்தி வந்தவர். இன்று அவர் எத்துறையிலும் தீவிரமாகச் செயற்பட முடியாத அளவிற்கு உடல் தளர்வினைச் சந்தித்திருக்கிறார். இந்நிலையில் ஒரு சிலர் மட்டும்தான் அவரைச் சந்தித்து வருகிறார்கள். மக்களைப் பொறுத்தவரை தாம் ஆற்றிய பணிகளை நினைவிற்கொண்டு இன்னமும் மரியாதை செலுத்துகிறார்கள், கெளரவமளிக்கிறார்கள் என்கிறார் அய்யாத்துரை!

அய்யாத்துரை, சரியென்றால் ஐயாத்துரை என்றுதான் வந்திருக்க வேண்டும். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டதனால்தான் அய்யாத்துரை என எழுதத் தொடங்கியிருக்கிறார். அவர் ஓர் அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி என்பதற்கும் அப்பால் சிறந்த எழுத்தாளர். டி.அய்யாத்துரை என்ற பெயரைப்போலவே மாத்தளை ரோகிணி என்ற அவரது புனைபெயரும் பிரபல்யமானது!

டி.அய்யாத்துரை என்ற பெயரில் ஏராளமான கட்டுரைகளையும், மாத்தளை ரோகிணி என்ற பெயரில் பல இலக்கிய படைப்புகளையும் எழுதியிருக்கிறார். "உரிமைப்போராட்டத்தில் உயில் நீத்த தியாகிகள்" என்ற தலைப்பில் முதல் நூலை 1993இல் வெளியிட்டார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த டெவன் சிவனு, முள்ளோயா கோவிந்தன் முதலான தியாகிகள் பற்றி அந்த நூலில் பதிவுசெய்திருக்கிறார். தவிரவும், பூங்கோதை புயலானாள், வந்த துன்பம் போதும், அவனுக்கு அவள் துணை ஆகிய தொடர் கதைகளைத் தினகரனில் எழுதியிருக்கிறார். 1997இல் இதயத்தில் இணைந்த இரு மலர்கள் என்ற நாவலை துரைவி பதிப்பகத்தாரான அமரர் துரை.விஸ்வநாதனின் உதவியுடன் வெளியிட்டார். இஃது அவரின் சுருக்கமான அறிமுகம்.

புகழுக்காகப் பித்துப் பிடித்து அலையும் இன்றைய தமிழ் இலக்கிய பரப்பில் அய்யாத்துரை போன்றவர்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது விசனத்திற்குரிய விடயமே! ஏக காலத்தில் இலக்கியத்தையும் எழுத்தையும் அரசியலில் இரண்டறக் கலந்து வெற்றி கண்ட திராவிட இயக்கத்தினரைப்போன்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களுள் அய்யாத்துரையும் முக்கியமானவர். இன்று அவ்வாறனவர்கள் தமிழர் மத்தியில் வளர்வது அரிது. சி.வி.வேலுப்பிள்ளை, வி.கே.வெள்ளையன் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய மற்றொருவர் இவர். சிவியின் இனப்படமாட்டேன் நாவலுக்கு அடியெடுத்துக்ெகாடுத் தவர். அதற்கு வழியேற்படுத்தியது அகிலனின் பாய்மரக்காற்றினிலே என்கிறார் அய்யாத்துரை.

அய்யாத்துரையை மெத்தப்படித்த மேதையென்று சொல்வதற்கும் இல்லை. கம்பளை புசத்தன்னை தோட்டத்தில் பிறந்து தொழிலாளியாகப் பணிபுரிந்தவர். 1966ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துகொண்டு கலஹா மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார். பின்னர் அவரை சங்கத்தின் மத்திய குழு உதவிச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மஸ்கெலியா மூன்று அங்கத்தவர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், காமினி திசாநாயக்க, சௌமிய மூர்த்தி தொண்டமான், அநுர பண்டாரநாயக்க ஆகியோர் தெரிவாகினர். அய்யத்துரை நான்காவது இடத்திற்கு வந்தார். அதன் பின்னர் 1993ஆம் ஆண்டு மயில் சின்னத்தில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு

வெற்றியீட்டினார். அஃது அவரின் மக்கள் பணிக்கு மிக பக்கபலமாக அமைந்ததுடன், மத்திய மாகாணத்தில் 298 வேலைத்திட்டங்களை நிறைவேற்றினார். பாதை அபிவிருத்தி, நூலகங்களை அமைத்தல், மின்சார விநியோகம் முதலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். இதன் மூலமாக அவருக்கு மக்கள் மனங்களில் நிரந்தர இடத்தைப் பிடிக்க முடிந்தது. என்றாலும் 1999இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் இந்திய வம்சாவளி மக்கள் பேரணியில் போட்டியிட்டபோதிலும், தெரிவாகவில்லை. மிகச்சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும் அவர் தனது மக்கள் பணியை விட்டுக்ெகாடுக்கவில்லை. மனந்தளராமல், தொழிற்சங்கத்தின் ஊடாக தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்ெகாடுத்து வந்தார்.

வி.கே.வெள்ளையன் எவ்வாறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்தாரோ அதே வழியில் இற்றைவரை அய்யாத்துரையும் தன்னை மக்கள் சேவையில் இணைத்துக்ெகாண்டிருக்கிறார். வெள்ளையன் ஆரம்பித்த தொழிலாளர் தேசிய சங்கம் இன்று மீண்டும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்பு எய்துவதற்கு முயற்சித்து வந்தாலும், வெள்ளையன் தொழிலாள வர்க்கத்திற்கு ஆற்றிய பணிகள் எவராலும் மறக்க முடியாதவை. உதாரணமாக சேவைக்காலப் பணம் அல்லது பதினான்கு நாள் சம்பளம் என்ற கொடுப்பனவின் பிதா மகன் வெள்ளையன் என்றால் மிகையில்லை. எண்பதுகளில் அவர் ஆரம்பித்த போராட்டத்தின் விளைவாகவே சேவைக்காலப் பணம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைவுகூர்கிறார் அய்யாத்துரை.

"அந்தக் காலத்தில் மாசப் பென்சன் வழங்குவார்கள். 22ரூபாய், 18ரூபாய், 12 ரூபாய் என மூன்று பிரிவுகளாக அவரவர் வேலை செய்த வருடங்களின் அடிப்படையில், 22 வருடங்களுக்கு மேல் வெவ்வேறு கட்டங்களாக வழங்கப்படும். அதனை மாற்றியே வெள்ளையன் சேவைக்காலப் பணமாக ஒரு வருடத்திற்குப் பதினான்கு நாட்கள் சம்பளம் எனக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்ைகயை முன்வைத்துப் போராடினார். அவரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியால்தான், இன்று தனியார் துறை ஊழியர்களுக்கு, ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்களுக்கு சேவைகாலப் பணம் வழங்கப்பட்டு வருகிறது"

தொழில் சட்ட நுணுக்கங்களை விரல்நுனியில் வைத்துச் செயற்படும் அய்யாத்துரை, இலக்கிய பரப்பிலும் தன்னை ஈரமாக்கிக்ெகாண்டவர். திராவிட இயக்க சமூக சீர்திருத்த படைப்புகள் தனது அறிவுப் பசிக்கு இரை தந்ததாகச் சொல்கிறார். அய்யாத்துரையின் இலக்கிய ஆளுமையைக் கண்ட கு.இராமச்சந்திரன் தான் அவருக்கு மாத்தளை ரோகிணி என்ற புனைபெயரை சூட்டியிருக்கிறார்.

"நான் எழுதிய கதைகளையெல்லாம் பார்த்துவிட்டு, உங்களுக்கு ஒரு புனைபெயர் வைக்க வேண்டுமே! என்று சொன்ன இராமச்சந்திரன், நீங்கள் என்ன நட்சத்திரத்தில் பிறந்தீர்கள்? என்று கேட்டார். ரோகிணி நட்சத்திரம் என்றேன். உடனே, இன்றிலிருந்து உங்கள் பெயர் மாத்தளை ரோகிணி! சரியா? என்றார். இப்பிடித்தான் எனக்கு ரோகிணி என்ற பெயர் வந்தது" என்கிறார். அநேகர் இவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்துக்ெகாண்டிருந்துள்ளனர்.

ஒருமுறை (1994) இவர் எழுதிய உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் என்ற நூல் அறிமுக விழா இரத்தினபுரியில் நடைபெற்றது. அதனை சப்ரகமுவ சாகித்திய சம்மேளனம் ஏற்பாடு செய்ததுமல்லாமல், அய்யாத்துரையின் சேவையைப் பாராட்டி, 'சேவைச்சிகரம்' என்ற கௌரவப்பட்டத்தையும் வழங்கி கௌரவித்தது. இன்றும் அந்தப் பட்டத்தைப் பெருமையாகவும் மரியாதைக்குரியதாகவும் கருதுவதாகத் தெரிவிக்கின்றார்.

அய்யாத்துரையைப் பொறுத்தவரை கடந்த நாற்பது ஆண்டுகாலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க, அரசியலுடன் முரண்பாடான கொள்கையைக் கொண்டிருந்தார். என்றாலும் தற்போது மூன்று மாதகாலமாக அந்தக் காங்கிரஸின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றக் கிடைத்திருப்பது திருப்தியாக இருக்கிறது என்கிறார் இந்த சேவைச்சிகரம். நான்கு பிள்ளைகளின் தந்தையான அய்யாத்துரை தற்போது ஹட்டன் இல்லத்தில் இளைய மகனுடன் தங்கியிருக்கிறார். மூன்று பிள்ளைகள் திருமணம் முடித்து மாத்தளையிலும் கொழும்பிலும் வசித்து வருகின்றனர். அய்யாத்துரையுடன் தொடர்புகொள்ள : 0514904052

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
4 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.