பழைய மாடிவீட்டுத் திட்டத்தைப்போல மலையகத்துக்குப் பொருந்தாது பொருத்து வீடுகள்

பொருத்துவீடு: மாதிரி தோற்றம்

பன். பாலா

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கென 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் மக்களின் எதிர்ப்புகளையடுத்து தடைப்பட்டிருக்கின்றது. அதை அமுல்படுத்துவதில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் காட்டும் அக்கறையும் அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அவருக்கேற்பட்டுள்ள முறுகல் நிலையும் இன்னும் சுமுக நிலைக்கு வந்தபாடில்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டு நிறுவனமொன்று அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் இத்திட்டத்தை அமுல்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் முழுநாட்டுக்குமே பொருத்தமில்லாத திட்டம் இதுவென்பதே அவதானிகள் பதிவு.
உலகிலுள்ள குளிர் வலய நாடுகளில் வீடுகளை சுலபமாக அமைத்துக் கொள்ளவென உருவாக்கப்பட்டதே இரும்பு பொருத்து வீடுகள் முறைமை. எனினும் வடக்கு, கிழக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள இத்திட்டம் மலையகத்துக்குக் கொண்டு வரும் யோசனையொன்றை அமைச்சர் மனோ கணேசன் பிரதமர் ரணிலிடம் சமர்ப்பித்திருந்ததாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தன. பின்னர் இவ்விடயம் அப்படியே அமுங்கிப்போனது.
ஆனால் அதனை மீண்டும் மலையகத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 100 வீடுகளை அமைப்பதற்கான திட்டமொன்றின் மூலம் இதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். இதில் சில மலையக அரசியல்வாதிகள் முனைப்பாக இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்த வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சலுகைகள் வழங்குவதன் பேரில் அரசாங்கத்திடம் இதை முன்வைத்தது. இதன்படி 65 ஆயிரம் பொருத்து வீடுகளை வடக்கு, கிழக்குப் பகுதியில் அமைப்பதே அரசாங்கத்தின் திட்டம்.
இவ்வீடுகள் இரும்பிலான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். ஏற்கனவே தொகுதியாக்கப்பட்டு தயார் நிலையிலான பொருத்து முறைகளிலேயே இவை அமையும். இதனடிப்படையில் ஒரு பொருத்து வீட்டுக்கான செலவு 2.18 மில்லியன் ஆகும். ஆனால் மலையகத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தனிவீடு ஒன்றுக்கான செலவு 1.2 மில்லியன் மட்டுமே.
எனினும் தயார் நிலையான பொருத்து வீடுகளுக்கான செலவு இதைவிடக் குறைவாகவே இருக்கலாமென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். கால விரயம் தவிர்க்கப்படுவதுடன் வெறும் பொருத்துதல்களைச் செய்வதன் மூலம் வீடுகள் உருவாக்கப்படுவதால் செய்கை கூலியும் குறைவடையும்.
இவ்வாறான வீடுகள் இலங்கையின் எப்பகுதிக்கும் பொருத்தமாக இருக்காது என்பதே ஆய்வுகளின் முடிவு. முழுவீட்டின் கட்டுமானமும் உலோகங்களால் ஆக்கப்படுவதால் வீட்டினை தேவைக்கு ஏற்ப புதுபிக்க முடியாது. திருத்தங்களை மேற்கொள்ளவும் வழியிருக்காது. இதேசமயம் இத்தகைய வீடுகள் குறுகிய காலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு பலவீனமடையலாமென கூறப்படுகின்றது. இதன் ஆயுட்காலம் பற்றியும் ஐயம் நிலவுகின்றது.
அமைச்சர் சுவாமிநாதனின் கருத்துப்படி இவ் வீடுகள் 60, -70 வருடங்களுக்கு தாக்குப்பிடிக்குமாம். 200 வருடகால லயத்து வாழ்க்கையில் மனமொடிந்து போயிருக்கும் மலையக மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகளே அவசியம். தவிர இத்திட்டம் பரீட்சார்த்தமாக அமுல்படுத்த முனைந்தாலும் கூட இது சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதும் இவ்வீடுகளின் கட்டமைப்பு பற்றி மக்களுக்கு விளக்கி அவர்களது கருத்தறிவதும் முக்கியம்.
இன்று மலையக மக்கள் 15 இலட்சம் பேர் வரை வாழ்கின்றார்கள். இதில் 10 இலட்சம் பேர் தோட்டங்களிலேயே வாழ்விடங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.
(தொடரும்...)

 

 

பழைய மாடிவீட்டுத்....

எனினும் இவர்கள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வெளி இடங்களிலேயே வேலை செய்கின்றார்கள். இதனடிப்படையில் சுமார் இரண்டரை இலட்சம் பேர்வரை தோட்டத் தொழிலை நம்பி வாழ்கின்றார்கள். இவர்கள் லயங்களிலும் தனி வீடு, மாடி வீடு, தற்காலிக குடியிருப்புகளிலும் தங்கி நிற்கின்றார்கள். இவர்களது குடியிருப்புகளில் 80 வீதமானவை மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன.
கிராமப் புறங்களில் 96.06 வீதமானோர் தனி வீடுகளில் வசிக்கும் அதே நேரம் தோட்ட மக்களில் 33.04 வீதமானவர்களே தனி வீடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது வீட்டுத் தேவை முழுமையடைய வேண்டுமானால் தனியார் கம்பனி மற்றும் அரச முகாமைத்துவங்களின் கீழ் வரும் 432 தோட்டங்களில் 240961 தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
கடந்த 20 வருடங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 31,761 ஆகும். இதில் தொழிலாளர்கள் வங்கிக் கடனுதவி மூலம் நிர்மாணித்துக் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை 6774. எனினும் இவ்வாறான வீடுகளைக் கட்டிக் கொண்டவர்கள் வங்கிக் கடனைச் செலுத்தி முடிந்த நிலையில் இதுவரை இவ்வீடுகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை. இதே நேரம் அடிப்படை வசதிகள் அனைத்தையும் கொண்டிருக்கவில்லை.
இந்த நல்லாட்சி அரசாங்கம் மலைய மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் சில வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. நிதி ஒதுக்கீடும் நடந்திருக்கின்றது. இதுவரை 1600 வீடுகள் வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வீட்டிற்கான உரிமம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் வீடுகளைத் தமது தேவைக்கேற்ப விஸ்தரித்துக் கொள்ள முடியும். திருத்திக் கொள்ள இயலும், மாடிவீட்டுத் திட்டம் போல இதில் அசௌகரியங்கள் ஏற்படாது.
மலையக மக்களுக்கான வீட்டுத் தேவையை முழுமையாக நிறைவேற்றுவது என்பது நீண்ட காலத்திட்டமாகவே இருக்கமுடியும். இது இலேசான இலக்கு அல்ல.
இந்த நிலையிலேயே மலையகத்தில் இரும்பு பொருத்து வீட்டுத் திட்டத்தை தந்திரமாக நுழைக்க மறைமுக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகள் சஞ்சலத்தை உண்டாக்குகிறது. மலையக அரசியல்வாதிகள் தூரநோக்கின்றி இவ்வாறான யோசனைகளுக்கு துணை போகுமிடத்து அரசாங்கம் இத்திட்டத்தை அமுல் நடத்த துணியவே செய்யும்.
குளிரினாலும் உஷ்ணத்தினாலும் பாதிப்பினை உண்டாக்கக் கூடிய பொருத்து வீடுகள் பழைய லயத்து வாழ்க்கை முறைமையைப் புதுப்பிப்பது போலவே அமையும்.
நடப்பு நிதியாண்டில் 25 ஆயிரம் வீடுகளை அமைப்பது என்ற அரசாங்கத்தின் கொள்கையை ஏதாவது ஒரு வழியில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என அரசாங்கம் நினைக்குமாயின் அதற்கு எந்த வகையிலும் இந்தப் பொருத்து வீடுகள் சரியான தெரிவாக முடியாது.
மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதில் சிரத்தை எடுக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் பொருத்து வீட்டுத் திட்டம் சம்பந்தமாக கசிந்திருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பது நல்லது. மலையகத்தில் இதனை நுழைக்க ஆர்வம் காட்டிய அமைச்சர் மனோ கணேசனும் இது பற்றிய மௌனம் கலைக்க வேண்டும். இதுவே புத்திஜீவிகளது எதிர்பார்ப்பு.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 5 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.