இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி இன்று தென்னாபிரிக்கா பயணம்

எம் பஸ்ரிப்

19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, இன்று ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்க மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவுடனான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகவுள்ளது.
கடந்த வருடம் தென்னாபிரிக்க இளையோர் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதுடன், இதில் 2க்கு 1 என இலங்கை இளையோர் அணி வெற்றிபெற்றதுடன், இதுவரை காலமும் இவ்விரு அணிகளும் 9 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளதுடன், இதில் 6 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் சிம்பாப்வே இளையோர் அணியுடன் இதுவரை நடைபெற்றுள்ள 4 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றமை இங்கு கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கிண்ண போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற 15 ஒருநாள் போட்டிகளில் 9இல் இலங்கை அணி வெற்றியைப் பதிவு செய்தது.
இதேவேளை கடந்த மாதம் நிறைவுபெற்ற ஆசிய கிண்ண போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் குறிப்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விஷ்வ சதுரங்க, ஹசித போயகொட, ரெவான் கெலி, அசேன் பண்டார மற்றும் அணித்தலைவர் கமிது மெண்டிஸ் ஆகியோர் இத்தொடரில் இடம்பெறவுள்ளதுடன், பந்துவீச்சில் பிரகாசித்த ப்ரவீன் ஜயவிக்ரம, நிபுன் ரன்சிக, ஹரீன் புத்தில மற்றும் ஷெஹான் டேனியல் ஆகியாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணி வீரர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்பட்டாலும், இத்தொடரில் மேலும் சில புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 11ஆம் திகதி பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ள இப்போட்டித்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் எதிர்வரும் 15ஆம் திகதி விளையாடவுள்ளதுடன், 16 மற்றும் 20ஆம் திகதி சிம்பாப்வேயுடனும் இறுதிப்போட்டி 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி தென்னாபிரிக்காவுடனான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 10 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.