சிட்னி டெஸ்ட் போட்டியுடன் மிஸ்பா ஓய்வு?

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, டெஸ்ட் அரங்கில் அதிக வயதில் சதம் அடித்த வீரருக்கான பெருமையைப் பெற்றுக்கொண்ட மிஸ்பா, கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி பாகிஸ்தான் அணிக்கு தலைவராகச் செயற்பட்டு 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முதலாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.இதன்படி, 15 வருடகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கவுள்ள மிஸ்பா, பாகிஸ்தான் அணியை உலக டெஸ்ட் அணிகளின் தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொண்டு வந்த வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளையடுத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்த மிஸ்பா, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளுக்கிணங்க டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு குறித்து பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்வியை தொடர்ந்து செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே மிஸ்பா மேற்படி தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மிஸ்பா, ஓய்வு குறித்து யோசிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அணிக்கு எவ்வித பங்களிப்பும் செய்ய முடியவில்லை என்றால் அணியில் இருந்து பயனில்லை என்பதை எப்போதும் நம்புகின்றேன்.
சிட்னி டெஸ்ட் குறித்து முடிவு செய்யவில்லை. பார்ப்போம். என்று நம்பிக்கையற்ற வகையில் தெரிவித்துள்ளார். இதுவரை, 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பா, 36 அரைச்சதம், 10 சதங்கள் உள்ளடங்கலாக 4895 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
5 + 4 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.